
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்..!
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பாமக நிறுவனரான நான் தலைவர் பொறுப்பை எடுத்துக்கொள்வதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசியலில் ஹாட் டாபிக்காக மாறியது ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் மோதல் தான். விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் ராமதாஸ், அன்புமணி இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இதன் பின்னணியில் பாமக இளைஞரணி தலைவராக ராமதாஸின் மகள் வழி பேரன் முகுந்தனை நியமனம் செய்து ராமதாஸ் அறிவித்ததற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது அமைந்துள்ளது.
அன்புமணியின் பேச்சால் ஆத்திரமடைந்த ராமதாஸ், "கட்சியை உருவாக்கியவன் நான், வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். எனவே முடிவை நான்தான் எடுப்பேன்" என மேடையிலேயே அன்புமணியிடம் காட்டமாக கூறினார். அன்புமணி உடனே எழுந்து, "என்னை சந்திக்க நினைப்போர், இனி பனையூரில் உள்ள புதிய அலுவலகத்தில் என்னை சந்திக்கலாம்" என சொல்லி எழுந்துச் சென்றார். இதனை தொடந்து நிர்வாகிகள் யார் பக்கம் செல்வதென அறியாமல் குழப்பத்தில் நின்றனர்.
இருவருக்கும் இடையில் பல நாட்கள் நீடித்து வந்த பனிப்போர் தற்போது வெளிப்படையாக தெரியவந்துள்ளது. பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், ‘பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாமக தலைவராக இருந்த அன்புமணி இனி பாமகவின் செயல் தலைவராக செயல்படுவார். தலைவர் பதவியிலிர்ந்து நீக்கப்பட்டதற்கு காரணங்கள் பல உண்டு.. அதை பின்னர் சிறுக சிறுக பகிர்ந்து கொள்கிறேன். பாமக நிறுவனரான நான் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.