
மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் ..!
மோரில் உள்ள புரோபயாடிக்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவுகிறது.
மற்றவர்களைப் போன்று சர்க்கரை நோயாளிகளுக்கும் அந்தந்த சீசனில் உள்ள உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படும். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில், சர்க்கரை நோயாளிகள் தாகத்தை தணிக்க தினமும் மோர் குடிக்கலாமா? குடிக்கக் கூடாதா? என்ற சந்தேகம் ஏற்படும்.
பாலில் இருந்து வெண்ணையை பிரித்து எடுத்த பின்னர் மீதமுள்ள நீரை மோர் என்று அழைக்கிறோம். 100 மி.லி. மோரில் 62 கலோரிகள், புரதம் 3 கிராம், கொழுப்பு 3 கிராம் கார்போஹைட்ரேட் 5 கிராம் இருக்கிறது. மேலும் இதில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் ஏ, சி, பி6, பி12, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், பான்டோதனிக் ஆசிட் போன்ற வைட்டமின்களும், தாதுக்களும் இருக்கின்றன.
சர்க்கரை நோயாளிகளுக்கு மோர் சாப்பிடுவதால் கீழ்க்கண்ட நன்மைகள் ஏற்படுகின்றன.
வெப்பத்தின் காரணமாக ஏற்படும் நீர் இழப்பு சார்ந்த அசௌகரியங்களையும், நோய்களையும் தடுத்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க சிறந்த பானமாக மோர் திகழ்கிறது.
மோரில் உள்ள புரோபயாடிக்ஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் வராமல் தடுக்க உதவுகிறது.
இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக் இன்டெக்ஸ்) 35 என்று மிகக் குறைந்த அளவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் பயமின்றி மோரை தினமும் குடிக்கலாம்.
மோரில் உள்ள லாக்டிக் அமிலம் பாக்டீரியாக்களுக்கு எதிரான ஆன்டிபாடிகளின்(பிறபொருளெதிரி) உற்பத்தியை அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
மோரில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் எலும்புகளை பலப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ்(எலும்புப்புரை) போன்ற எலும்பு நோய்களை வராமல் தடுக்கிறது.
மோரில் உள்ள ஸ்பிங்க்கோலைப்பிடஸ் மற்றும் பயோ ஆக்டிவ் புரதங்கள் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவையும் ரத்த அழுத்தத்தையும் குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது.
மோரில் உள்ள MFGM (மில்க் ஃபாட் கிளோபியூல் மெம்பரேன்) பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருகிறது.
மோரில் உள்ள லாக்டிக் அமிலம் தான் அதன் புளிப்பு தன்மைக்கு காரணமாக விளங்குகிறது.
மோரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தி ஈறுகளில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.
மோர் குடிப்பதால் எதுவும் பக்க விளைவுகள் கிடையாது. இருப்பினும் மோரில் லாக்டோஸ் என்ற சுகர் இருப்பதால் லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
இத்தகைய ஏராளமான நன்மைகளை மோர் அருந்துவதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு கிடைப்பதால், சர்க்கரை நோயாளிகள் பயமின்றி தயக்கமின்றி தினமும் வெயில் காலத்தில் தாகத்தை தணிக்க மோர் அருந்தலாம்.