
சுனிதா வில்லியம்சுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி ..!
இந்தியாவுக்கு வருமாறு சுனிதா வில்லியம்சுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு
செய்வதற்காக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை
சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு ஜூன் மாதம்
அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் சென்றார்.
ஆய்வு பணிகளை முடித்துவிட்டு 8 நாட்களில் பூமிக்கு திரும்பும் திட்டத்துடன் அவர்கள் விண்வெளிக்கு சென்றனர்.
ஆனால் அவர்கள் சென்ற போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவர்களால் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்ப முடியாமல் போனது.
இதனையடுத்து வேறொரு விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வர நாசா எடுத்த முயற்சிகளும் தோல்வியை சந்தித்தன.
இதனால் அவர்கள் இருவரும் மாதக்கணக்கில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 9 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில்
சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்க 'குரூ டிராகன்' விண்கலம் 'பால்கன்-9' ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
அந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றது.
அங்கு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரையும் ஏற்றிக்கொண்டு
விண்கலம் பூமிக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. இருவரும் நாளை அதிகாலை பூமிக்கு திரும்ப உள்ளனர்.
இந்நிலையில், விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியதும் இந்தியாவுக்கு
வருமாறு சுனிதா வில்லியம்சுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சுனிதா வில்லியம்சுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நீங்கள் பூமியில் இருந்து பல ஆயிரம் மைல் தூரம் இருக்கும்போதும்,
நீங்கள் எங்கள் இதயத்தின் அருகிலேயே உள்ளீர்கள். நீங்கள் நலமுடன் இருக்கவும்,
உங்கள் இலக்கில் வெற்றிபெறவும் இந்திய மக்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
நீங்கள் பூமிக்கு திரும்பியதும் இந்தியாவுக்கு வரவேண்டும்.
இந்தியாவின் புகழ்மிக்க மகள்களில் ஒருவரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.