கோபிசெட்டிபாளையம் அருகே, தீக்குளிக்க வந்த இளைஞரால் பரபரப்பு!
ஈரோடு மாவட்டம்: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கீழ்பவானி வாய்கால் கரையோரம் அமைந்துள்ள கோட்டுப்புள்ளாம்பாளையம் கிராமம் பூதிமடைபழையூரில் வசிக்கும் அருண்குமார் என்பவர் தனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு மற்றும் காளிபிளவர் பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில் அருண்குமாரின் தோட்டத்திற்கு அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்காலின் அருகே நீர்வளத்துறைக்கு சொந்தமான நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதால் அப்பகுதியில் வாய்க்காலின் கசிவுநீர் தேங்கி நிற்க வழியின்றி தண்ணீர் நேரடியாக
அருண்குமாரின் விவசாய தோட்டத்தி்ன் பாதியளவில் நீர்தேங்கி கரும்பு மற்றும் காளிபிளவர் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக அருண்குமார் கீழ்பவானி வாய்க்கால் அருகே உள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றி தனது தோட்டத்திற்குள் தண்ணீர் புகுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு மனு அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தற்போது மீண்டும் அருண்குமாரின் விவசாய பயிர்களுக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளதை அகற்றித்தரக்கோரி கோபி நீர்வள ஆதாரத்துறை அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்கப்போவதாக கூறி தனது தாய் மற்றும் மனைவி குழந்தைகளுடன் அருண்குமார் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மனைவி மலர்விழி மற்றும் இரண்டு குழந்தைகள் மற்றும் தாயார் காளீஸ்வரி ஆகியோருடன் நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அருண்குமாரிடம் கோபி துணைக்காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உரிய அதிகாரிகளிடம் பேசி உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின் சாலையில் நின்றுகொண்டிருந்த அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீஸ் வேனில் ஏற்றி அவரது கிராமத்திற்கு அழைத்துச்சென்றனர்.
விவசாயி ஒருவர் ஆக்கிரமிப்புகளை அகற்றித்தரக்கோரி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:
#கோபிசெட்டிபாளையம்
# Erode
# Farmer
#