திருவண்ணாமலை கிரிவலம் வழிபாடு எப்போது தோன்றியது?

திருவண்ணாமலை கிரிவலம் வழிபாடு எப்போது தோன்றியது?
By: No Source Posted On: October 16, 2024 View: 361

திருவண்ணாமலை கிரிவலம் வழிபாடு எப்போது தோன்றியது?

பக்தர்களை தன்னை நோக்கி ஈர்த்து, அவர்களுக்கு ஞானமும் முக்தியும், அருளும் திருவண்ணாமலை தலத்தில், கைமேல் பலன் தரும் வழிபாடாக கிரிவல வழிபாடு திகழ்கிறது. திருவண்ணாமலையில் வருடத்தின் அனைத்து நாட்களும் கிரிவலம் சென்று வழிபடலாம் என்றாலும், பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்து வணங்குவதையே பெரும்பாலான பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடும் வழக்கம் எப்படி ஏற்பட்டடு, முதன் முதலில் கிரிவலம் சென்றது யார், எதற்காக கிரிவலம் சென்றார் என்ற புராண கதையை திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

திருவண்ணாமலை கிரிவலம் :

திருவண்ணாமலை என்றதுமே நினைவிற்கு வருவது கிரிவல வழிபாடு தான். எத்தனையோ கோவில்களில் மலையை வலம் வந்து வழிபடும் முறை இருந்தாலும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் மட்டுமே மகத்தான பலன்களும், முக்தியும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இங்கு மட்டுமே சிவனே மலையாக அமர்ந்து காட்சி தருவதால், மலையை வலம் வந்து வணங்குவது, சிவனை வலம் வந்து வணங்குவதற்கு இணையானதாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம் எப்படி உருவானது என்பதற்கு புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது. கிரிவலம் மேற்கொள்ளும் அனைத்து பக்தர்களும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

மலையாக அமர்ந்த சிவன் :

ஜோதி வடிவமாக தோன்றி விஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கும் காட்சி அளித்த பின் மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே இங்கு கிரிவலத்தை தொடங்கி வைத்தார் என புராணங்கள் சொல்கின்றன. அவர் நடத்திய ஒரு திருவிளையாடல் தான் கிரிவலம் தோன்ற காரணமாக அமைந்தது. அந்த திருவிளையாடலால் திருவண்ணாமலையில் முதன் முதலில் கிரிவலம் சென்றது பார்வதி தேவி ஆவார். லிங்க வழிபாடு, லிங்கோத்பவர் வழிபாடு தோன்றிதும் திருவண்ணாமலையில் தான் என்பதால் இது சிவனுக்கு விருப்பமான தலமாகவும் சொல்லப்படுகிறது.

 

பார்வதிக்கு சிவன் அளித்த வரம் :

ஒரு முறை கைலாயத்தில் சிவபெருமானின் இரு கண்களையும் பார்வதி தேவி மூடியதால் உலகம் இருண்டு உயிரினங் கள் அனைத்தும் துன்பப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் பார்வதிதேவிக்கு தோஷம் ஏற்பட்ட து. அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேட வேண்டிய நிலை ஏற்பட்டதால் பார்வதி தேவி திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்தார். அவர் தவத்தை கண்டு மனம் இறங்கிய சிவ பெருமான், அவருக்கு காட்சி கொடுத்தார். வேண்டிய வரம் கேள் என்றார். அதற்கு பார்வதி தேவி உங்களை என்றென்றும் பிரியாது இருக்கும்படி உங்கள் உடலில் பாதியை தந்து அருள வேண்டும் என்றார்.

 

முதலில் கிரிவலம் வந்தவர் :

உடனே சிவபெருமான் அப்படியானால் நீ என்னை சுற்றி வர வேண்டும் என்று கூறினார் அதை ஏற்றுக் கொண்ட பார்வதி தேவி திருவண்ணாமலையில் ஈசனே மலையாக வீற்றிருப்பதால் அந்த மலையை சுற்ற தொடங்கினார். மலையை வலம் வருதல் என்பது சிவபெருமானையே சுற்றி வருவதற்கு சமமாகும் என்பதை உணர்ந்ததால் தன் தலை மீது கை கூப்பியபடி வலம் வந்தார். அவருக்கு சிவபெருமான் கிரிவல பாதையில் நேர் அண்ணாமலை அருகே ரிஷப வாகனத்திலும், ஈசான்ய பகுதியில் ஒளி ரூபத்திலும் இரண்டு இடங்களில் காட்சி கொடுத்து ஆசீர் வதித்தார். பின்பு தனது உடலின் இட பாகத்தை வழங்கி தன்னோடு ஐக்கியமாக்கி கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார்.

 

பார்வதி சிவனிடம் வைத்த கோரிக்கை :

அப்போது பார்வதிதேவி, “நான் தங்களை சுற்றி வந்ததால் என்னை ஆசீர்வதித்ததை போல திருவண்ணாமலை மலையை கிரிவல வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அருள் வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதற்கு சிவபெருமான் சம்மதித்தார். இந்த முறையில் தான் திருவண்ணாமலையில் கிரிவலம் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது. பார்வதி தேவியை தொடர்ந்து இதர கடவு ள்கள், தேவர்கள், ரிஷிகள், சித்தர்கள், மகான்கள் என அனைத்து தரப்பினரும் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து ஈசனாகிய அண்ணாமலையாரின் அருளை பெற்றனர். இதைத் தொடர்ந்து சித்தர்களின் வழிகாட்டுதலின் பேரில் சாதாரண மனிதர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் நடைமுறை பழக்கத்துக்கு வந்தது.

Tags:
# திருவண்ணாமலை  # கிரிவலம்  #  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos