இந்த வார விசேஷங்கள் - வாங்க பார்க்கலாம்!

இந்த வார விசேஷங்கள் - வாங்க பார்க்கலாம்!
By: No Source Posted On: October 12, 2024 View: 453

இந்த வார விசேஷங்கள் - வாங்க பார்க்கலாம்!

கிருத்திகை விரதம் 19.10.2024 – சனி

 

மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு விசேஷமானது. இந்த நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். கிருத்திகை நட்சத்திர விரத பலன்கள் குறித்து பெரியோர்கள் சொன்ன பலன்கள் அதிகம். கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத் துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள். காலை விரதமிருந்து மாலை முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். கந்தசஷ்டி பாராயணம், திருப்புகழ் பாராயணம் செய்யலாம்.

 

இடங்கழி நாயனார் குருபூஜை 20.10.2024 – ஞாயிறு

 

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் இடங்கழி நாயனார். தில்லையிலுள்ள நடராஜப் பெருமான் ஆலயத்துக்கு பொற்கூரை வேய்ந்த ஆதித்தனுக்கு முன்னோர்கள் வழியில் அரச வம்சத்தில் பிறந்தவர். வேளீர் வம்சத்தில் பிறந்தவர் என்று சொல்வார்கள். கொடும்பாளூரை தலைநகராகக் கொண்டு வேளீர்குலத் தலைவனாக வாழ்ந்தவர். கொடும்பாளூர் என்பது திருச்சியில் இருந்து விராலிமலை வழியாக மதுரை செல்லும் சாலையில் புதுக்கோட்டை மணப்பாறை சாலை சந்திப்பில் உள்ள சிற்றூர். ஒருகாலத்தில் பேரூர்.

 

ஒருநாள் நாட்டில் பஞ்சம் வந்தது. எங்கும் நெல்மணிகள் கிடைக்கவில்லை. அந்த ஊரில் சிவனடியார்களுக்கு அன்னம் இடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த ஒரு அன்பர், சிவனடியார்களுக்கு அன்னம் இடுவதற்காக நெல்மணிகள் கிடைக்காததால், வேறு வழியின்றி அரசனுடைய அரண்மனைக்குள் புகுந்து, அங்குள்ள நெற்களஞ்சியத்தில் இருந்து நெல்லை எடுத்துக்கொண்டு சென்று, சிவனடியார்களுக்கு அன்னம் இட்டார். இதை அறிந்த அரண்மனைக் காவலர்கள் அந்த தொண்டரைப் பிடித்து வந்து மன்னன் முன் நிறுத்தினர்.

 

‘‘ஏன் நெற்களஞ்சியதிலிருந்து நெல்லை கொள்ளை அடித்தீர்?’’ என்று மன்னர் கேட்டார்.

 

‘‘நான் சிவனடியார்களுக்கு மஹேஸ்வர பூஜை செய்து அன்னம் படைக்கும் வழக்கமுடையவன். அன்னமிட எங்கும் நெல்மணிகள் கிடைக்கவில்லை. சிவனடியார்கள் வயிறு பசியால் காயும்போது நான் என்ன செய்வேன்? தங்கள் அரண்மனைக்குள் புகுந்து அரண்மனை பண்டாரத்தில் இருந்து நெல்லை எடுத்துச் சென்றேன்’’ என்று சொன்னவுடன் மன்னன், “அந்த நெற்களஞ்சியம் எனக்கு பண்டாரம் அல்ல; இதோ சிவனடியார்களுக்கு அன்னம் படைப்பதே குறிக்கோளாகக் கொண்ட இந்த அன்பர் அன்றோ நமக்குப் பண்டாரம் (செல்வம்)’’ என்று சொல்லி அவரைப் போற்றி வணங்கினார்.

 

தம்முடைய நெற்களஞ்சியத்தில் இருந்த நெல்மணிகளை எல்லாம் எடுத்து ஏழை எளியவர்களுக்கு கொடுத்தார். பல இடங்களில் சிவத்தொண்டு புரிந்து கோயில்களுக்கு திருவிளக்கு ஏற்றுவதற்கு மானியங்கள் அளித்தார். சிவத்தொண்டை தன்னுடைய குலத் தொண்டாக கொண்ட மன்னன் இடங்கழி நாயனார் குருபூஜை ஐப்பசி கார்த்திகை. இன்றைய தினம்.

 

கோனாட்டுக் கொடும்பாளு ரிருக்கும் வேளிர்

குலத்தலைவ ரிடங்கழியார் கொங்கிற் செம்பொ

னானேற்றார் மன்றின்முக டம்பொன் மேய்த்த

வாதித்தன் மரபோர் நெற் கவர்ந்தோ ரன்பர்

போநாப்ப ணிருளின்கட் காவ லாளர்

புரவலர்முன் கொணரவவர் புகலக் கேட்டு

மானேற்று ரடியாரே கொள்க வென்று

வழங்கியர சாண்டருளின் மன்னி னாரே.

 

சங்கடஹர சதுர்த்தி 20.10.2024 – ஞாயிறு

 

இன்று சங்கடஹர சதுர்த்தி. சங்கடங்களை எல்லாம் போக்கும். ஞாயிறு என்கிற சூரியனுக்குரிய நாளில் வருவது இன்னும் விசேஷமாகும். காலை விநாயகருக்கு விளக்கேற்றி, அறுகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. மாலை வேளையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். வழிபட்டு வீடு திரும்பி, அதன்பிறகு உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம்.

 

சக்தி நாயனார் குருபூஜை 25.10.2024 – வெள்ளி

 

சோழநாட்டிலே வரிஞ்சை என்னும் ஊரிலே பிறந்தவர் சக்தி நாயனார். வேளாண்மைத் தொழில் செய்தவர். எப்பொழுதும், சிவ சிந்தனையோடு இருப்பவர். அவருடைய வழக்கம் சற்று வித்தியாசமானது. அவருடைய எதிரில் யாராவது சிவத்துரோகம் செய்தாலும், சிவ அபசாரம் செய்தாலும் சற்றும் பொறுத்துக்கொள்ள மாட்டார். சிவனை இகழ்ந்து பேசினாலும், உடனடியாக அவரைக் கண்டிப்பார். தண்டிப்பார். இதற்கான காரணத்தைக் கேட்ட பொழுது அவர் சொன்னார்;

 

“சிவ அபசாரம் ஒருவனை நரகத்தில் தள்ளும். இப்பொழுதே தண்டனையைப் பெறுவது நல்லது. இல்லாவிட்டால், அவர்கள் மிகப் பெரிய ஆன்ம நாசத்திற்கு ஆளாகி, நரகத்தில் மீட்டெடுக்க முடியாமல் உழல்வார்கள்” என்பார். “ஒருவகையில் தண்டனை அவர்களுக்கு நல்லதுதான்” என்பார். அதனால் அவர் முன்னாலேயே சிவனைப்பற்றி தவறாகப் பேசுவதற்கு அனைவரும் அஞ்சுவார்கள்.

அவர் தம்முடைய செல்வம், நேரம், உடல் உழைப்பு இவற்றால் முழு நேரமும், சைவ சமய வளர்ச்சிக்கு தொண்டு புரிந்தார். எந்த சிவனடியார்களைக் கண்டாலும், அவர்களை அழைத்து வந்து அவர்களுக்குப் பாதபூஜை செய்து அன்னமிட்டு ஆதரித்து வந்தார். சிவன் கோயில்களுக்குத் தேவையான பல தொண்டுகளைத் புரிந்தார். நிறைவாக அவர் பிறந்த ஊரிலேயே சிவபதம் அடைந்தார். அவர் சிவபதம் அடைந்த தினம் ஐப்பசி பூசம் குருபூஜை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

 

“கழல்சத்தி வரிஞ்சையார் கோன் அடியார்க்கும் அடியேன்” என்று அவருடைய பெருமையை சுந்தரர் போற்றுகின்றார். அவர் வாழ்வை சுருக்கமாகச் சொல்லும் பாடல் இது;

 

விரிதருகா விரிநாட்டு வரிஞ்சை யூர்வாழ்

வேளாளர் சத்தியார் விமலர் பாதத்

துரியவர்க ளடிபரவு மொருமை யார்நா

வோவாமே யைந்தெழுத்து முரைக்கு நீரா

ரிருளின்மிட றுடையபிரா னடியார் தம்மை

யிகழ்வார்நாத் தண்டாயத் திடுக்கி வாங்கி

யரியுமது திருத்தொழிலா வுடையார் மன்று ளாடியசே வடிநீழ லடைந்துளாரே.

 

பொருள்: சோழநாட்டிலே, வரிஞ்சியூரிலே, வேளாளர் குலத்திலே, சக்தி நாயனார் இருந்தார். அவர் பரமசிவனுடைய திருவடித் தாமரைகளைச் சிறிதும் மறவாது திருத்தொண்டு செய்தார். அவர் சிவனடியார்களை இகழ்ந்து பேசுபவர்களை தண்டித்தார். நெடுங்காலம் பல தொண்டுகள் அன்போடு செய்துகொண்டிருந்து. சிவனுடைய திருவடி நிழலை அடைந்தார்.

 

அம்மா மண்டபம் – மதுரகவி மோட்ச நாள் (குருபூஜை) 25.10.2024 – வெள்ளி

 

திருச்சி மாம்பழச் சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் அம்மா மண்டபத்துக்கு அருகில் காணப்படும் ஒரு நந்தவனமும் உண்டு. அது சாதாரண நந்தவனமல்ல. ஒரு நெடிய இனிய வரலாறு உண்டு. அங்கே ஒரு வைணவ சுவாமிகளின் திருவரசு (உடல் பள்ளிபடுத்திய இடம்) உள்ளது. இந்த இடம் திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும் காவிரிக்கரை ஓரத்தில் உள்ளது. அது என்ன வரலாறு?

 

1846-ஆம் வருடம் தைப்பூரத்தன்று திருவரங்கம் வீரேஸ்வரத்தில் வைணவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட குடும்பமான அரங்கப் பிள்ளை- ரங்கநாயகி அம்மாள் தம்பதிக்குப் புதல்வனாக பிறந்தார் மதுரகவி சுவாமிகள். திருவரங்கத்தில் உறையும் அரங்கர் மீது அளவில்லா பிரியம் கொண்டிருந்தார்.

 

செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி

எண் பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்ட வா என்று

மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்து உரை செய்த இம் மாலை

பண் பகர் வில்லிபுத்தூர்க் கோன் பட்டர்பிரான் சொன்ன பத்தே.

 

– என்ற பெரியாழ்வாரின் பாடலில் மயங்கினார். கி.பி. 1855 ஆம் வருடம் வைகுண்ட ஏகாதசி காலத்தில், நம்பெருமாள் (உற்சவர்) உலா வரும்போது, மலரால் அலங்கரிக்கப்பட்ட நம்பெருமாள் அழகில் மனதை பறிகொடுத்த நிலையில் திருமாலுக்கு திருமாலை (இறைவனுக்காக மலர் மாலை தொடுத்தல்) கைங்கர்யம் செய்ய வேண்டும் என உறுதி பூண்டார்.

 

அதற்காக காவிரி கரையை ஒட்டி, வேங்கடாசல ராமானுசதாசர் என்பவரின் திருநந்தவனத்தில் வசித்து வரும் திருநந்தவனக் குடிகள் என்று அழைக்கப்படுகிற ஏகாங்கிகளிடம் (ஏகாங்கி அதாவது, கட்டை பிரம்மச்சாரியாக, திருமண வாழ்வில் ஈடுபடாமல், சிந்தையை அரங்கத்தானிடம் மட்டுமே வைத்து, தினமும் நந்தவனத்தில் பூப்பறிப்பது, பின் அதை மாலையாகத் தொடுப்பது. அவற்றைச் சேகரித்துக் கொண்டு கோயிலில் சேர்ப்பது என வாழ்க்கை முறை கொண்ட இறை அடியவர்கள்) மாலைகளை தொடுக்கும் கலையை கற்றுக் கொண்டார்.

 

ஸ்ரீவானமாமலை ஜீயரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு ஸ்ரீபிள்ளை லோகாச்சார்யா சந்நதி சாமி ஐயங்காரிடம் நாலாயிர திவ்யப் பிரபந்தம் போன்ற வைணவ நூல்களைக் கற்றறிந்தார். நந்தவனத்தை மேலும் விஸ்தரிக்கும்பொருட்டு வைணவ அன்பர்களின் உதவியோடு சோழமாதேவி கிராமத்தில் சில நிலங்களை வாங்கினார்.

 

நந்தவனத்தை அடுத்து சில தோட்டங்களையும் வாங்கி, பூ கைங்கர்யத்தை விரிவுபடுத்தினார். பின்னப்பட்டு போயிருந்த திருவரங்க திருக்கோயிலின் பொன் கூரையையும் புதுப்பிக்க, கி.பி 1891-ல் திருவரங்கம் கோயிலில் இருந்த அர்ச்சகர்கள், சுவாமியை அணுக, முதலில் தனக்கு மாலை கைங்கர்யம் அன்றி வேறெதுவும் என்று மறுத்து விட்டார் மதுரகவி.

 

அன்றிரவே மதுரகவியின் கனவில் தோன்றி அரங்கன் ஆணையிட மறுநாள் தன் குருநாதரான குவளைக்குடி சிங்கம் ஐயங்காரைச் சந்தித்து விமானத் திருப்பணியையும், அரங்கன் கனவில் வந்த விஷயம் பற்றியும் விவரித்தார்.

 

அரங்கன் திருவுளப்படியே திருப்பணியைத் துவக்கி, தன்னுடையதே முதல் உபயம் எனக்கூறி, ஒரு பித்தளைக் குடத்தில் பத்து ரூபாயைப் போட்டு துவங்கி வைத்தார் திருகுவளைக்குடி சிங்கம் ஐயங்கார்.

 

ஐந்தே வருடங்களில் தேசம் முழுக்க அலைந்து எண்பதாயிரம் ரூபாய் திரட்டி, விமானத் திருப்பணிகள் நடந்து. கிபி 1903-ல் மிகப் பெரிய குடமுழுக்கும் நடந்தேறியது. அந்தக் காலத்தில் எண்பதாயிரம் ரூபாய் என்பது சாதாரணம் அல்ல என்பதை நினைவில் கொள்க.

 

இதற்கு அடுத்த ஆண்டு (கிபி 1904) குரோதி வருடம் ஐப்பசி மாதம் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தின் ஏழாம் நாளன்று, நந்தவன குழாத்திற்கு வழங்கபட்ட பிரசாதத்தை பெற்றுக்கொண்ட மதுரகவி சுவாமிகள் அன்றைய தினமே இரவு சுமார் பதினொரு மணிக்கு ஆச்சார்யனின் திருவடியை அடைந்தார். திருச்சி மாம்பழச் சாலையில் இருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் அம்மா மண்டபத்துக்கு அருகில் சுவாமிகளின் திருவரசு உள்ளது.

 

மதுரகவி சுவாமிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊறுகாய் சேவையும் திருவரங்கம் கோயிலில் நடந்து வருகிறது. பெருமாளுக்கு மதிய பிரசாதமாக (பெரிய அவசரம் என்பர்) வெள்ளைச் சாதம், ரசம், கீரை, ஊறுகாய் போன்றவை
நிவேதனம் செய்யப்படும்.

 

இதில் ஊறுகாய்க்காக பெருமாளுக்குத் தினமும் பத்து எலுமிச்சம் பழங்களும் தாயாருக்கு ஐந்து எலுமிச்சம் பழங்களும் நந்தவனத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வருகின்றன. திருவரங்கம் கோயில் வெளியாண்டாள் சந்நதிக்கு அருகில் மதுரகவி சுவாமிகளைப் பற்றிய வரலாறு. ஒரு கல்வெட்டாக அவரது சேவையின் சாட்சியாக இன்றைக்கும் இருக்கிறது.

Tags:
#இந்த வார விசேஷங்கள்  #  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos