இன்று ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை! சாமி கும்பிடுவது எப்படி?
இன்றுடன் நவராத்திரி விழா முடிவடையும் நிலையில் அதன் நிறைவு நிகழ்ச்சியான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை செய்ய உகந்த நேரம் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளலாம். மேலும் பூஜையை செய்வது எப்படி, நெய்வேத்தியமாக என்ன படைக்க வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
நவராத்திரியின் கடைசி நாள் என்பது இன்று கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையுடன் முடிவடையும். இந்த 9 நாள் வெற்றியை கொண்டாடும் விதமாக நாளை விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி என்பது துர்கா தேவி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களும் 9 நாட்களும் கடும் தவம் இருந்து மகிஷாசுரனை வதம் செய்வர். இதுதான் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த 9 நாட்களும் அந்தந்த அம்பாளின் ஸ்லோகங்களை சொல்லி வழிபட வேண்டும். வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், சீப்பு, பூ, கண்ணாடி, ரவிக்கை துண்டு, புடவை, தாலி சரடு உள்ளிட்டவைகளை தாம்பூலமாக கொடுத்தனுப்ப வேண்டும்.
இன்று ஆயுத பூஜை: நவராத்திரியின் 9ஆவது நாளில் அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்கு அம்பாள் பூஜை செய்து வழிபட்டதாக புராணக் கதைகள் உண்டு. இதை நினைவுப்படுத்தும் விதமாகவே சரஸ்வதி பூஜை அன்று நாம் பயன்படுத்தும் ஆயுதங்களையும், நம் வாழ்விற்கு வளத்தை கொடுக்கும் பொருட்களையும் வைத்து வழிபடுகிறோம்.
இந்த நாளில் அவரவருக்கு எது கண் கண்ட தெய்வமோ, உணவு, பாதுகாப்பு அளிக்கும் சாமியோ அதற்கு பூஜை செய்வது வழக்கம். வீட்டில் பயன்படுத்தும் கத்தி, அரிவாள், தோசை கல், பூட்டை காக்கும் பூட்டு சாவி, மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவைகளை வைத்து பூஜை செய்ய வேண்டும். இதே அலுவலகங்கள் என்றால் கணக்கு புத்தகங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு சரஸ்வதி பூஜை அன்று தாங்கள் படிக்கும் புத்தகங்களை வைத்து வழிபடுவது வழக்கம். எனவே ஆயுதங்களை வைத்து வழிபடுவதால் இது ஆயுத பூஜை என்றும், புத்தகங்களை வைத்து வழிபடுவதால் சரஸ்வதி பூஜை என்றும் அழைக்கப்படுகிறது.
நாளை விஜயதசமி: நவராத்திரியின் நிறைவாக 10 ஆவது நாளில் அம்பிகை, மகிஷாசுரனை வதம் செய்து வெற்றியை கொண்டாடுவதே விஜயதசமியாகும். இந்த நாளில் புதிதாக தொழில் தொடங்குதல், புதிய கணக்கு தொடங்குதல், கல்வி பயில உகந்த நாளாகும். குழந்தைகளுக்கு வித்யாரம்பம் தொடங்க உகந்த நாளாகும்.
பூஜை செய்வது எப்படி?: வீடு, வாசல், கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்து சுத்தம் செய்து திருநீரை தண்ணீரில் குழைத்து பட்டை போட்டு அதில் சந்தனத்தையும் குங்குமத்தையும் வைக்க வேண்டும். மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையையும் சுத்தம் செய்துவிட்டு பூக்களை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
பிறகு ஒரு மனைக் கட்டையை வைத்து அதில் புத்தகங்களுக்கு பொட்டு வைத்து அடுக்கி வைக்கவும். அது போல் கத்தி, கேஸ் லைட்டர், அரிவாள், மிக்ஸி, கிரைண்டர், உள்ளிட்டவைகளை துடைத்து பொட்டு வைத்து எதையெல்லாம் சுவாமி முன்பு வைக்க முடியுமோ அதையெல்லாம் வைக்க வேண்டும். பின்னர் விளக்கேற்றி, சாம்பிராணி புகை போட்டு, சுண்டல், பொரிக் கடலை, வெற்றிலைப் பாக்கு, வாழைப்பழம் வைத்து படைக்க வேண்டும்.
நல்ல நேரம் எது: இந்த பூஜை செய்ய நல்ல நேரம் எது தெரியுமா? சரஸ்வதி, ஆயுத பூஜை செய்ய உகந்த நேரமும் காலை 8.20 மணி முதல் 10.20 மணி வரை. மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை. மாலை நேரத்தில் பூஜை செய்வோர் , மாலை 6 மணிக்கு மேல் செய்துக் கொள்ளலாம். இந்த 3 நேரங்களில் அவரவருக்கு தோது வரும் நேரத்தில் பூஜை செய்து கொள்ளலாம்.
Tags:
#ஆயுத பூஜை
# சரஸ்வதி பூஜை
#