கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம்? - துப்பாக்கியுடன் கொள்ளையர்கள்!
நாமக்கல் மாவட்டம் வெப்படையில் 4 பைக், ஒரு காரை இடித்துத்தள்ளிய கண்டெய்னர் லாரி அதிவேகமாக நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வெப்படை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குமாரபாளையம் மற்றும் வெப்படி காவல் நிலைய போலீசார் கண்டெய்னரை பின்தொரட்ந்தனர். சேலம் மாவட்டம் சன்னியாசிபட்டி அருகே கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்தனர்.
அப்போது லாரியின் முன்பக்கத்தில் இருந்து நான்கு வட இந்தியர்களை பொதுமக்கள் கீழே இழுத்து தர்ம அடி கொடுத்தனர். டிஎஸ்பி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்டனர். 500-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கண்டெய்னர் லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கண்டெய்னரில் பணம் இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் கண்டெய்னருக்குள் துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால் கண்டெய்னரை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த கண்டெய்னரை போலீசார் காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று அதிரடி மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் உள்ள மூன்று ஏ.டி.எம். மையங்களில் 65 லட்சம் ரூபாய் கொள்கை அடிக்கப்பட்டது. இந்த பணம் கண்டெய்னரில் இருக்குமா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது.