சென்னையில் மழை காரணமாக விமான சேவை பாதிப்பு
சென்னையில் நேற்று இரவு கனமழை பெய்தது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை ஆவடி, அம்பத்தூர், வானகரத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பதிவானது.
திருவாலங்காட்டில் 11 செ.மீ., மணலியில் 10 செ.மீ.,கே.கே. நகர், அண்ணா நகர், கத்திவாக்கத்தில் 9 செ.மீ., கொளத்தூர், கோடம்பாக்கம், புழலில் 8 செ.மீ., செங்குன்றத்தில் 7.5 செ.மீ., ஊத்துக்கோட்டையில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
ராயபுரம், திருவொற்றியூர், மாதவரம், ஆலந்தூரில் 7 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது. மதுரவாயில் மற்றும் சோழிங்கநல்லூரில் 6 செ.மீ அளவில் கனமழை பெய்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரம்பூர் சுரங்கப்பாதையில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. அடுத்த ஓரிரு மணிநேரத்தில் மழைநீர் வடியும். மற்ற சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை. போக்குவரத்து சீராக உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக 35 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 2 விமானங்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கனமழையால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்ட நிலையில் 7 விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன.