அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை மாநகராட்சி சமுதாய நலக்கூடம்,கண்ணப்பர் திடலில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்ணப்பர் திடலில் உள்ள வீடற்றோர் குடியிருப்பில் கடந்த 22 ஆண்டுகளாக வசித்து வந்த 114 குடும்பங்களுக்கு இன்று புதிய வீடுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த தேர்தலின் போது உங்களுக்கெல்லாம் வீடு கட்டித்தரப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி கொடுத்திருந்தார். அடுத்த ஆண்டுக்குள் வீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல இந்த ஆண்டு வீடுகள் கட்டப்பட்டு உங்களிடம் தரப்பட்டுள்ளது.
இனி உங்களுக்கான வீட்டில் நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். இவ்வளவு நாட்கள் வீடு இல்லாதவர்களுக்கு அரசில் பலன்கள் உங்களுக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இனி எளிமையாக கிடைக்கும்.
உங்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்ய திராவிட மாடல் அரசு தயாராக உள்ளது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமை தொகை திட்டம் என பல்வேறு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. இந்த திட்டங்களின் பயனாளிகள் மட்டுமல்ல நீங்கள் பங்கேற்பாளர்கள். எனவே அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன். பி.கே.சேகர்பாபு, பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் பரந்தாமன், தாயகம் கவி, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.