காவல் துறையினருக்கு அண்ணா பதக்கங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காவல் துறையினருக்கு அண்ணா பதக்கங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
By: No Source Posted On: September 14, 2024 View: 2676

காவல் துறையினருக்கு அண்ணா பதக்கங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 129 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள்
துறை, ஊர்க்காவல் படை மற்றும் விரல்ரேகைப் பிரிவு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

 

இந்த ஆண்டு, காவல் துறையில் தலைமைக்காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர் வரையிலான 100 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் முதல்நிலை சிறைக்காவலர் முதல் உதவி சிறை அலுவலர் வரையிலான 10 பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கும், ஊர்க்காவல்படையில் ஊர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி வரையிலான 5 ஊர்க்காவல் படை அலுவலர்களுக்கும் மற்றும் விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கும், அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை அங்கீகரிக்கும் வகையில் அண்ணா பதக்கங்கள் வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.

 

மேலும், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் பணிபரிந்து வரும் எஸ்.மந்திரமூர்த்தி, முன்னணி தீ அணைப்போர் 7807 மற்றும் ராமச்சந்திரன், தீ அணைப்போர் 8229 ஆகிய இருவரும் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி இரவு தாமிரபரணி ஆற்றின் கரையில் வெள்ளம் புகுந்த கிராமங்களில் இருந்து மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும், மற்றும் மீட்பு பணி சவாலாக இருந்த நிலையிலும், படகுகள் மூலம் சுமார் 448 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

 

அவர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு செயலை பாராட்டி இருவருக்கும் "தமிழக முதலமைச்சரின் தீயணைப்பு பணிக்கான அண்ணா வீரதீர பதக்கம்" வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.

Tags:
#காவல் துறை  # அண்ணா பதக்கங்கள்  # முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos