சாதனையை முறியடித்த இந்தியா : பாரா ஒலிம்பிக்கில் 20 பதக்கங்கள்
பாரா ஒலிம்பிக் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய 6-ம் நாளான நேற்று இந்தியாவுக்கு பல பதக்கங்கள் கிடைத்தன. தீப்தி ஜீவன்ஜி, ஷரத் குமார், மாரியப்பன் தங்கவேலு, அஜீத் சிங், சுந்தர் குர்ஜார் பதக்கங்கள் வென்றனர்.
இதன்மூலம் இந்தியா பாரா ஒலிம்பிக்கில் இதுவரை 20 பதங்கங்கள் வென்றுள்ளது. இதற்கு முன் டோக்கியோவில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் 19 பதக்கங்கள் வென்றதுதான் இதுவரை பாரா ஒலிம்பிக்கில் அதிக பக்கம் வென்றதாக இருந்தது. தற்போது பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் முந்தைய சாதனையை இந்தியா முறியடித்துள்ளது. போட்டி முடிவதற்குள் இந்தியா 25 பதக்கங்கள் என்ற இலக்கை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கான குண்டு எறிதல் (எஃப் 34) இறுதிப் போட்டியில் பாக்யஸ்ரீ மஹாப் ராவ் 5-வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார். 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் 50 மீட்டர் 3 பொசிசன் (எஸ்.ஹெச்.1) பிரிவில் அவானி லெகாரா 5-வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
பெண்களுக்கான 400 மீட்டர் (T20) ஓட்டத்தில் ஜீவன்ஜி வெண்கல பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F46) போட்டியில் அஜீத் சிங், சுந்தர் குர்ஜார் பதக்கம் வென்றனர். இவர்கள் முறையே வெள்ளி, வெண்கல பதக்கம் வென்றனர்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (T63) போட்டியில் இந்தியாவின் ஷரத் குமார் வெள்ளி பதக்கமும், மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கமும் வென்றனர்.
இந்தியா 3 தங்கம், 7 சில்வர், 10 வெண்கலத்துடன் மொத்தம் 20 பதக்கங்கள் பெற்று 17-வது இடத்தில் உள்ளது.