திருச்செந்தூர் தேரோட்டம், ஆவணித்திருவிழா கோலாகலம்

திருச்செந்தூர் தேரோட்டம், ஆவணித்திருவிழா  கோலாகலம்
By: No Source Posted On: September 02, 2024 View: 4078

திருச்செந்தூர் தேரோட்டம், ஆவணித்திருவிழா கோலாகலம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

12 நாட்கள் நடைபெறும் விழாவின் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களிலும், சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் 7-ம் நாளான கடந்த 30-ந்தேதி சுவாமி சண்முகர் வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தங்க சப்பரத்தில் செம்பட்டு அணிந்து, செம்மலர் சூடி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

 

8-ம் நாள் திருவிழாவான 31-ந்தேதி காலையில் சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பச்சை சாத்தி கோலத்தில் காட்சியளித்தார்.

 

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதைமுன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. பின்னர் 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணிக்கு முதலில் விநாயகர் தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து 7.05 மணிக்கு நிலையம் சேர்ந்தது.

 

அதனைத்தொடர்ந்து 7.10 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. தேரோட்டத்தை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.

 

தேரோட்டத்தை முன்னிட்டு தேருக்கு முன்பு யானை செல்ல பஞ்சவாத்தியங்கள் வாசிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து வள்ளியம்மன் எழுந்தருளிய தேரானது, நிலையத்தில் இருந்து புறப்பட்டு நான்கு வீதிகளிலும் உலா வந்து நிலையம் சேர்ந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

 

தேரோட்டத்தில் கோவில் கண்காணிப்பாளர்கள் வேல்முருகன், அஜித், முத்துமாரி, ஒய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குநர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன். ராதாகிருஷ்ண ஆதித்தன், தங்கேச ஆதித்தன், அறங்காவலர் குழு உறுப்பினர் ராம்தாஸ், குமார் ராமசாமி ஆதித்தன், பாலமுருகன் ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், வைத்தீஸ்வரன் ஆதித்தன், சண்முகானந்த ஆதித்தன், முரளி காந்த ஆதித்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

தேரோட்டத்தை முன்னிட்டு திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:
#திருச்செந்தூர்  # திருச்செந்தூர்  # ஆவணித்திருவிழா  #  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos