சென்னை பெரம்பூரில் 4-வது ரெயில் முனையம் - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

சென்னை பெரம்பூரில் 4-வது ரெயில் முனையம் - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!
By: No Source Posted On: August 11, 2024 View: 6522

சென்னை பெரம்பூரில் 4-வது ரெயில் முனையம் - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

 

சென்னையில் ரெயில் சேவையை மேம்படுத்த ரெயில்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் சென்னையில் நான்காவது ரெயில் முனையம் அமைக்கவும் திட்டமிருக்கிறதா..?

 

என்று மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு கேள்வி எழுப்பி இருந்தார்.

 

இது தொடர்பாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில்,

 

"இந்திய ரெயில்வேயைப் பொறுத்தவரை சென்னை மிக முக்கியமான ஒரு மாநகரம்.

 

இங்கு தொடர்ச்சியாக பல திட்டங்களை ரெயில்வேத்துறை செயல்படுத்தி வருகிறது.

 

தற்போது சென்டிரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய 3 முனையங்கள் செயல்பட்டு வருகின்றன.

 

பயணிகள் எண்ணிக்கை மற்றும் ரெயில்களின் எண்ணிக்கையை மனதில்கொண்டு 4-வதாக பெரம்பூரில் புதிய ரெயில் முனையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு நடந்து வருகிறது.

 

தமிழகத்தில் பல முக்கியமான திட்டங்களுக்கு 27,749 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது.

 

ஆனால் இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்தப் பணியை விரைந்து முடிக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம் உட்பட 77 ரெயில் நிலையங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

 

இதன்படி இந்த ரெயில் நிலையங்களில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

 

காத்திருப்பு அறைகள், தொழில் சார்ந்த கூட்ட அரங்குகள், இலவச வைபை வசதி, சில்லறை விற்பனைக் கடைகள்,


ரெயில் நிலையங்களின் மேற்பகுதியில் வணிக வளாகங்கள் ஆகியவை உள்ளூர் மக்களின் ரசனை மற்றும் பண்பாடு சார்ந்து அமைக்கப்படும்.

 

சாலைகளில் பயணிக்கும் பயணிகள் பாதுகாப்பு மற்றும் எளிதான ரெயில் பயணத்தை உறுதி செய்யும் வகையில்

 

கடந்த பத்தாண்டுகளில் 687 ரெயில்வே லெவல் கிராசிங்குகளில் ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளில் மேலும் 239 இடங்களில் ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

தற்போது சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள 12 நடைமேடைகள் மூலம்

 

தினசரி 158 ரெயில்களும், எழும்பூரில் 11 நடைமேடைகள் மூலம் 108 ரெயில்களும், தாம்பரத்தில் 9 நடைமேடைகள் மூலம் 93 ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

 

பல ரெயில்வே திட்டங்கள் தாமதமாவதற்கு நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்படும் நடைமுறை மற்றும் சட்ட சிக்கல்கள்தான் காரணம்.

 

புதிய ரெயில்களை அறிமுகம் செய்வது என்பது ஒரு தொடர்ச்சியான பணி.

 

பயணிகளின் எண்ணிக்கை, ரெயில் நிலையங்களில் ரெயில்கள் மற்றும் பயணிகளை கையாளும் இடவசதி ஆகியவற்றைப் பொறுத்து புதிய ரெயில்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

 

ஆண்டுக்கு 56,716 ரெயில் பெட்டிகள் தயாராகிறது.

 

இவற்றில் 19,391 பெட்டிகள் குளிர்சாதன வசதி கொண்டவை.

 

சென்னை புறநகர் ரெயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும்" என்று அவர் கூறினார்.

Tags:
#Chennai Central  # Chennai Egmore  # Tambaram  # Perambur  # Ashwini Vaishnaw  # சென்னை சென்டிரல்  # எழும்பூர்  # தாம்பரம்  # பெரம்பூர்  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos