மூட்டுவலியால் அவதிப்படறீங்களா? இந்த விஷயத்த ட்ரை பண்ணுங்க வலி குறையும்!
கீல்வாதம் பாதிப்பானது பெரும்பாலும் கால் மூட்டுகளில் தான் ஏற்படுகிறது. இதனால், தினசரி வேலைகளை செய்வதில் கூட சிரமம் ஏற்படுகிறது.
கீல்வாதம் என்றால் என்ன?
மூட்டுகளில் உள்ள பஞ்சுபோன்ற, மென்மையான திசுவான குருத்தெலும்பு தேய்வதால், அதன் அசைக்கும் திறனை இழந்துவிடும்.
இப்படி குருத்தெலும்பு முற்றிலுமாக தேய்ந்துவிட்டாலோ அல்லது அடர்த்தி குறைந்தாலோ மூட்டுகளில் உள்ள எலும்புகள் ஒன்றோடொன்று உரச ஆரம்பிக்கும்.
இதனால், வீக்கம், விறைப்பு, கடுமையான வலி மற்றும் மூட்டு இறுகுதல் அல்லது உடைதல் போன்றவற்றை ஏற்படுத்தும். இதுவே கீல்வாதம். இதை முழங்கால் மூட்டுவலி என்றும் சொல்வார்கள்.
கீல்வாத மூட்டுவலி ஏற்பட என்ன காரணம், அடிக்கடி முழங்கால்களில் காயங்கள் ஏற்படுவது கீல்வாதத்தை ஏற்படுத்தும்.
அதிக எடை அல்லது உடல் பருமன், முழங்கால்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி, மூட்டு சேதம் மற்றும் மூட்டு வலியை உண்டாக்கும்.
குடும்பத்தாருக்கு கீல்வாதம் இருந்தால், அவர்களின் சந்ததியில் வரும் இளம் வயதினருக்கும் கீல்வாதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
மூட்டுகளில் மீண்டும் மீண்டும் அசைவுகள் இருந்தால் ஆரம்ப கால மூட்டு வலி ஏற்படலாம்.
நிற்கும் போது, உட்காரும் போது, நடக்கும் போது தோரணை சரியாக இல்லாமலிருந்தாலும் மூட்டுகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு வலியை ஏற்படுத்தும்.
எலும்புகள் அல்லது மூட்டுகள் இயற்கையாகவே வளைந்திருந்தால் கீல்வாதம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
வயதாக ஆக, மூட்டுகளில் தொடர்ந்து அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இதுவும் கீல்வாதத்தை ஏற்படுத்தும்.
கீல்வாத மூட்டுவலி என்பது முற்றிலுமாக குணப்படுத்த முடியாத, நாட்பட்ட நோய் என்றாலும், அதற்கான சிகிச்சை முறைகள் மிகவும் எளிமையானவை.
அவற்றை தவறாமல் பின்பற்றி வருவதன் மூலமுமே நல்ல நிவாரணம் பெற்று மகிழ்ச்சியாக வாழ முடியும்.
எடை
கீல்வாதத்தால் ஏற்படும் மூட்டுவலிக்கு உடல் எடையே முக்கிய காரணம்.
ஏனென்றால், உடலின் மொத்த எடையும் மூட்டு, பாதம் மற்றும் இடை ஆகிய மூன்று பகுதிகள்தான் தாங்கிக் கொள்கின்றன.
எடை அதிகமாக இருக்கும்போது மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு எலும்புகள், தசைகள் பலவீனம் அடைந்து, கீல்வாதத்தை ஏற்படுத்தும்.
எனவே, எடை அதிகமாக இருப்பவர்கள் முறையான டயட்டை பின்பற்றி உயரத்திற்கு தகுந்த உடல் எடையை பராமரிக்கவும்.
உணவு
பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, புரோபயாட்டிக்ஸ், வைட்டமின் டி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஃபிளாவனாய்டுகள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
இது வீக்கத்தைக் குறைப்பதுடன் கீல்வாத அறிகுறிகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும்.
உடற்பயிற்சி
மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தவும், உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம்.
எனவே, தினமும் குறைந்தபட்சம் 20 - 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்க.
ரொம்ப கடினமான உடற்பயிற்சியாக இல்லாமல் ஏரோபிக் பயிற்சிகளான ஜாகிங், நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றை செய்யலாம்.
அதேபோல், யோகா மற்றும் டாய்-சி ( Tai-Chi ) போன்றவை மூட்டு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், வலியைக் குறைக்கவும் உதவும்.
ஐஸ் பேக், வெந்நீர் ஒத்தடம்
பெரும்பாலான வலிகளுக்கு ஐஸ் பேக் மற்றும் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுப்பது ஒரு பயனுள்ள மற்றும் பாதுகாப்பான சிகிச்சையாகும்.
சுடு தண்ணீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து வலி மிகுந்த இடத்தில் 15 - 20 வரை ஒத்தடம் கொடுக்கலாம்.
கைப்பொறுக்கும் சூட்டில் இருந்தால் போதும், அதிக சூடு வேண்டாம்.
இது தசைகளை தளர்த்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.
அதேபோல், ஐஸ் பேக் அல்லது ஐஸ் கட்டியை அதை வலி இருக்கும் இடத்தில் 20 - 30 நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம்.
இது அந்த பகுதியை உணர்ச்சியடையச் செய்து வீக்கத்தைக் குறைக்கும்.
Tags:
#Arthritis
# Leg Pain
# கீல்வாதம்
# Health Tips