விபத்தில் சிக்கிய கேரளா அமைச்சர்!
வயநாடு: கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் கார் விபத்தில் சிக்கியதில், அவர் காயமடைந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வயநாடு நோக்கிச் சென்ற கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே விபத்துக்குள்ளானது.
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரிய நிலச்சரிவுகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு, சூரல்மலா, முண்டக்கை, மலப்புரம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 150-ஐ கடந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நிலச்சரிவில் சாலைகள், பாலங்கள் மூழ்கியதால் பல்வேறு இடங்களில் மீட்புப்படையினர் கடுமையான சவால்களை எதிர்கொண்டனர். கேரள மீட்புப்படையினர் மட்டுமல்லாது, தேசிய மீட்புப்படையினர், இந்திய ராணுவத்தினர் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்தும் மீட்பு படையினர் இன்று இரண்டாவது நாளாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை 1000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி பலரைக் காணவில்லை எனவும் அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளதால் இரண்டாவது நாளாக இன்றும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
இந்நிலையில் நிலச்சரிவு பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வயநாட்டுக்கு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற வாகனம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அருகே விபத்துக்குள்ளானது. மஞ்சேரியில் இன்று காலை வீணா ஜார்ஜ் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கம்பம் மீது மோதியது.