இந்தியா, சீனாவுக்கு மாலத்தீவு அதிபர் முய்சு நன்றி
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டோர்னியர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆகியவை மாலத்தீவில் மருத்துவம் மற்றும் பிற காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன.
இதனை பராமரிக்கவும், இயக்கவும் இந்திய ராணுவத்தை சேர்ந்த 90 ராணுவ வீரர்கள் மாலத்தீவில் இருந்தனர்.
இந்நிலையில் சீன ஆதரவாளரான முகமது முய்சு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் மாலத்தீவின் இறையாண்மையை பாதிக்கும்
இந்திய ராணுவ வீரர்களை வௌியேற்றுவேன் என பிரசாரம் செய்து, அதை நிறைவேற்றவும் செய்தார்.
அதன்படி மாலத்தீவில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் அனைவரும் வௌியேற்றப்பட்டனர்.
மேலும் இந்தியா – மாலத்தீவு இடையே போடப்பட்டிருந்த ஹைட்ரோகிராபிக் ஒப்பந்தத்தை புதுப்பிக்க போவதில்லை என்றும் முய்சு தெரிவித்திருந்தார்.
இதனால் இந்தியா – மாலத்தீவு இடையே விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் மோடி 3ம் முறையாக பிரதமர் பதவியேற்ற நிகழ்ச்சியில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கலந்து கொண்டார்.
இதேபோல் சீனாவிடம் இருந்து ரூ.10,790 கோடியை மாலத்தீவு கடனாக பெற்றது.
மேலும் கடந்த ஜனவரி 8ம் தேதி மாலத்தீவு அதிபர் முய்சு சீனா சென்றார்.
அப்போது சீனாவிலிருந்து மாலத்தீவுக்கு நேரடி விமான சேவைகளை அதிகரிப்பது, விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு அதிபர்களும் விவாதித்தனர்.
20 முக்கிய ஒப்பந்தங்களில் இருநாட்டு அதிபர்களும் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலத்தீவின் 59வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய முகமது முய்சு, “மாலத்தீவின் பலவீனமான பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியா ரூ.400 கோடி நிதியுதவி வழங்கியது.
மாலத்தீவின் கடன் மறுசீரமைப்பு கோரிக்கைக்கு சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.
அண்மையில் மாலத்தீவின் நிலையான வளர்ச்சிக்கு முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தொடர்ந்து தன் ஆதரவை தெரிவித்து வருகிறது.
மாலத்தீவு மக்களின் நலனுக்காக எங்களின் பொருளாதார இறையாண்மையை வலுப்படுத்த ஒத்துழைப்பு தரும்
இந்தியா, சீனா நாடுகளுக்கு மாலத்தீவு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
Tags:
#INDIA
# China
# Maldives
# Mohamed Muizzu