மத்திய அரசு புதிய திட்டம் - நாடு முழுவதும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை!

மத்திய அரசு புதிய திட்டம் - நாடு முழுவதும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை!
By: No Source Posted On: September 10, 2024 View: 12163

மத்திய அரசு புதிய திட்டம் - நாடு முழுவதும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை!

மத்திய அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பயிர்க்காப்பீடு திட்டம், கடன் திட்டங்கள், விவசாய பொருட்கள், உரம், மருந்துகள் உள்ளிட்ட இடுபொருட்கள் வாங்க மானியங்கள் உள்பட பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

 

இதன் தொடர்ச்சியாக விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் வேளாண்மை திட்டங்களில் டிஜிட்டல் முறையை புகுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

டெல்லியில், வேளாண் தொழில்நுட்ப உச்சி மாநாடு நடந்தது. அதில் கலந்து கொண்ட மத்திய வேளாண் துறை செயலாளர் தேவேஷ் சதுர்வேதி ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

 

அதில் அவர் கூறியதாவது:-

கடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விவசாயிகள் நலனுக்காக ரூ.2 ஆயிரத்து 817 கோடி ஒதுக்கீட்டில் டிஜிட்டல் வேளாண்மை திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வேளாண்துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் விவசாயிகளை பதிவு செய்யும் பணியை தொடங்க உள்ளோம்.

 

விவசாயிகள் ஏதேனும் வேளாண் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்போது ஒவ்வொரு தடவையும் சரிபார்ப்பு பணியை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இதில் செலவு ஆவதுடன், சில தொல்லைகளும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண விவசாயிகள் பதிவேடு ஒன்றை உருவாக்க போகிறோம்.

 

தற்போது, மாநில அரசுகள் அளித்த விவசாய நிலங்கள், பயிர் சாகுபடி குறித்த தரவுகள் மட்டுமே மத்திய அரசிடம் உள்ளன. விவசாயிகளை பற்றி தனிப்பட்ட தரவுகள் இல்லை. அந்த குறையை இத்திட்டம் போக்கும்.

 

விவசாயிகள் பெயர்களை பதிவு செய்வதற்கானவழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.

 

அக்டோபர் மாதம், பதிவு செய்யும் பணி தொடங்குகிறது. இதற்காக முகாம்கள் நடத்தப்படும். மார்ச் மாதத்துக்குள் 5 கோடி விவசாயிகளின் பெயர்களை பதிவு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

 

அதன்பிறகு, ஆதார் போல், அந்த விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கப்படும். அதன்மூலம் அவர்கள் பல்வேறு வேளாண் திட்டங்களை பெற முடியும்.

 

விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை. விவசாய கடன் அட்டை உள்ளிட்ட திட்டங்களை சிக்கலின்றி பெற முடியும். மேலும், அரசின் கொள்கை திட்டமிடலுக்கும் இந்த தரவுகள் பயன்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:
#மத்திய அரசு  # farmers  # indian farmers  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos