வினேஷ் போகத்: வழக்கில் இன்று இரவு தீர்ப்பு!
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தஇறுதிப் போட்டியில் இருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
100 கிராம் உடல் எடை கூடியதாக கூறி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் கடும் அதிர்ச்சி அடைந்த வினேஷ் போகத்,
இனி என்னிடம் போராட சக்தியில்லை எனவும் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் அதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் முறையிட்டார்.
இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்.
இந்த நிலையில், வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பிடமும் விசாரணை நடத்தப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது.
மேலும் வினேஷ் போகத் விவகாரத்தை நீதிபதி அனபெல் பெனட் விசாரிப்பார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி வழக்கு விசாரணை இந்திய நேரப்படி நேற்று மாலை நடந்தது.
விசாரணை தொடங்கியபோது வினேஷ் போகத் தரப்பில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
முதல் நாளில் வினேஷ் போகத் எடை சரியாக இருந்தது என்றும், மறுநாள் எடை கூடியது விதிகளை மீறியது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து தெரிவித்துள்ள அவர், "கூடுதலாக இருந்த 100 கிராம் எடையின் காரணமாக வினேஷ் போகத்துக்கு போட்டியில் சாதகமான சூழல் அமைந்துவிடாது.
கோடைகால வெப்பத்தின் காரணமாக கூடுதல் தண்ணீரை குடிக்க வேண்டியது அவசியம்.
எல்லாவற்றுக்கும் மேல் வீராங்கனையின் உடல்நலம் முக்கியம் குறைவான நேர இடைவேளியுடன் கூடிய போட்டி அட்டவணை ஆகியவை முக்கிய காரணங்கள் என்றும் வாதங்களை முன்வைத்தார்.
இதையடுத்து தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், வினேஷ் போகத் வழக்கில் இன்று இரவுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்துள்ளது.
Tags:
#Paris Olympics
# Vinesh Phogat
# Indian professional freestyle wrestler
# woman wrestler
# Vinesh Phogat Case