மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தமிழ் வழி கல்வி..! - அமித்ஷா

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தமிழ் வழி கல்வி..! - அமித்ஷா
By: No Source Posted On: November 13, 2022 View: 65

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தமிழ் வழி கல்வி..! - அமித்ஷா

சென்னையில் நடந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பவள விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:- 75 ஆண்டுகளை ஒரு நிறுவனம் பூர்த்தி செய்கிறது என்றால், அந்த துறையில் அந்த நிறுவனம் மிகப்பெரிய தலைவர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். எனக்கும், சீனிவாசனுக்கும் இடையேயான நட்பு விளையாட்டுத்துறை மூலமாக மலர்ந்தது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகவும், இந்திய கிரிக்கெட் சங்க தலைவராகவும் சீனிவாசன் இருந்தபோது, நான் குஜராத் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தேன். அப்போது இருந்தே எங்களுக்குள்ளாக நல்ல நட்புறவு இருந்து வந்தது. விளையாட்டு வீரர்களின் நலன், உயர்வுக்காக மிகவும் பாடுபட்டவர். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இன்றைக்கு மிகப்பெரிய இலக்கை எட்டியிருக்கிறது.

இந்த நிறுவனத்தை உயர்த்தியதில் சீனிவாசனின் பங்கு மிகப்பெரியது. நாடு வளர்ச்சி பாதையை நோக்கி வலிமையாக சென்று கொண்டிருக்கிறது. 2025-ம் ஆண்டிலே இந்தியாவின் வளர்ச்சி 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும், கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை பார்த்தால், 11-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. சமீபத்திய ஆய்வுப்படி, 2027-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-ம் இடத்தை எட்டியிருக்கும்.

பாதுகாப்பு துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பை பிரதமர் மோடி தமிழகத்துக்கு கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடத்தில், சென்னை, திருச்சி, கோவை, சேலம், ஓசூர் அடங்கியிருக்கிறது. கொரோனா நேரத்தில் உலக நாடுகள் தவித்த சூழலில், இந்திய அரசு தடுப்பூசிகளை கண்டுபிடித்து தற்சார்பு அடைந்தது மட்டுமின்றி உலக நாடுகளுக்கு 2.25 கோடி மருந்துகளை வழங்கி உலக மக்களையே காப்பாற்றியது. நாட்டில் உள்ள 60 கோடி ஏழை மக்களின் வீடுகளில் கழிப்பறை, மின்சாரம், வீடு இல்லாதவர்களுக்கு வீடு, கியாஸ் சிலிண்டர் வழங்கியதோடு, மருத்துவ காப்பீடும் அரசு கொடுத்திருக்கிறது.

உலக பணத்துக்கான ஐ.எம்.எப். நிறுவனம், இந்த கண்டத்தில் இருண்ட பகுதியில் ஒளிமயமான வெளிச்சமாக இந்தியா தெரிகிறது என பாராட்டி இருக்கிறது. அப்படி இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது. 2022-23-ம் ஆண்டில் 6.8 சதவீத ஜி.டி.பி. உடன், ஜி20 கணக்கின்படி இந்தியா 2-ம் இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு இருக்கிறது. 2023-24-ம் ஆண்டில் ஜி20 நாடுகள் மத்தியில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பும் உண்டு. இந்திய அரசு செலவினம் மீது கவனம் செலுத்துகிறது. இது தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். இதுவரை வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. தொகையில், 2-வது அதிகபட்சமாக கடந்த அக்டோபர் மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ1.51 லட்சம் கோடியாக உள்ளது.

இதேபோல அக்டோபர் மாதம் செல்போன் மூலம் வங்கி பண (யு.பி.ஐ.) பரிமாற்றம் ரூ.12.11 லட்சம் கோடியாக உள்ளது. வாகன விற்பனை 21 லட்சமாக உயர்ந்திருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் மீது தனி கவனம் செலுத்துகிறார். தமிழக முன்னேற்றம் பற்றி அக்கறையுடன் விசாரிக்கிறார். தமிழகத்தின் வளர்ச்சியை மிக கூர்மையாக கவனித்து வருகிறார். தமிழகத்துக்கான மத்திய அரசின் வரியில் தரக்கூடிய பகிர்மான தொகை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரூ.62 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 455 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது 91 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு வழங்கும் மானியத் தொகை ரூ.35 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.95 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இது 171 சதவீதம் உயர்வு ஆகும். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளுக்காக ஆண்டுக்கு ரூ.8,700 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. பாரத் மாலா சாலை திட்டத்தின்கீழ் 2,800 கி.மீ. நீளமுள்ள சாலை உருவாக்க ரூ.91,570 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இதுபோல தமிழகத்தில் 64 சாலை திட்டங்கள் உருவாக்குவதற்காக மத்திய அரசு ரூ.47 ஆயிரத்து 589 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மெட்ரோ ரெயில் முதல் கட்ட விரிவாக்க பணிகளுக்காக ரூ.3,770 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.1,456 கோடி செலவில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளை மத்திய அரசு கொடுத்திருக்கிறது.

தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழ் மொழி உலகின் மூத்த, பழமையான மொழிகளில் ஒன்று. தமிழ் இலக்கியங்களும், உலக இலக்கியங்களில் மிகவும் தொன்மை வாய்ந்தது. எனவே தமிழ் மொழியை வளர்ப்பதும், பாதுகாப்பதும் தமிழகத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்தின் பொறுப்பு. தேசத்தில் பல்வேறு மாநிலங்கள் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை தங்களது தாய்மொழியில் தொடங்கியிருக்கிறார்கள். தமிழக அரசும் தமிழ் மொழியில் மருத்துவ கல்வியை போதித்தால், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு பயன் உள்ளதாகவும், எளிதாகவும் இருக்கும். தங்களது தாய்மொழியிலேயே மருத்துவ அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மாநிலத்தையும், தேசத்தையும் வலுப்படுத்தமுடியும். தமிழக அரசு தமிழ் மொழியில் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கற்றுக்கொடுக்க கவனம் செலுத்தினால், தமிழ் மொழிக்கு சேவை செய்வதற்கான பணிகளை நாங்கள் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:
#அமித்ஷா  # Amit Shah  # இந்தியா சிமெண்ட்ஸ்  # India Cements 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos