
67 ஆண்டுகள் பழமையான தலைஞாயிறு அரசு மருத்துவமனை மறுசீரமைப்பு..! BPCL CSR SUPPORT
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் காவிரி கடைமடை பகுதியில் அமைந்துள்ள சிறு நகரம் தலைஞாயிறு.
இங்கு 67 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அரசு சுகாதார நிலையம் சீரும் சிறப்புமாக செயல்பட்டுவந்தது.
இந்த சுகாதார நிலைய கட்டிடம் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில்,
அப்போதைய அமைச்சராக இருந்து, பின்னாளில் இந்திய குடியரசுத் தலைவராக திகழ்ந்த திரு ஆர்.வெங்கடராமன் அவர்களால் 1957 ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. அந்த கல்வெட்டு இப்போதும் இந்த கட்டிடத்தில் உள்ளது.
சேதமடைந்து, கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்த இந்த கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்து தரவேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் அவர்கள்
கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த கோரிக்கையை அன்பாலாயா அறக்கட்டளை நிர்வாகிகள், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திடம்
எடுத்துரைத்தார்கள்.
கூடவே ரத்த வங்கிக்கான இயந்திரங்களும் தலைஞாயிறு சுகாதார நிலையத்துக்கு தேவைப்படுகிறது என்பதை அன்பாலாயா அறக்கட்டளை நிர்வாகிகள், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திடம் எடுத்துரைத்தார்கள்.
இந்த கோரிக்கைகளை ஏற்று பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் CSR நன்கொடை உதவியுடன், கடந்த 4 மாத காலமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.
அனைத்து பணிகளும் நிறைவுபெற்று, இன்று இந்த கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. ரத்த வங்கிக்கான இயந்திரங்களும் பயன்பாட்டுக்கு வந்தன.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் திருச்சி பிராந்திய விற்பனை மேலாளர் திரு V நாகராஜ் அவர்கள் இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார்.
தலைஞாயிறு வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் வேம்பு செல்வன் அவர்களும், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் திருச்சி பிராந்திய ஒருங்கிணைப்பாளர் திரு விகாஷ் குமார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
அன்பாலாயா அறக்கட்டளை தலைமை அறங்காவலர் திருமதி ஷர்மிளா, அறங்காவலர் திரு திருஞானம், தலைஞாயிறு அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் திரு இளையராஜா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.