சீசர் மோப்ப நாய் பணி ஓய்வு, பிரியாவிடை அளித்த அதிகாரி!!
சென்னை விமான நிலையத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றி வந்த சீசர் மோப்பநாய் இன்றுடன் பணி ஓய்வு
சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் புதிதாக இணைந்துள்ள மோப்பநாய் யாழினி
சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வெடிகுண்டு, வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை விரைந்து கண்டறிய மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனர்.
முக்கியமாக லாப்ரடோர் என்கிற வகையை சேர்ந்த சீசர் என்கிற மோப்ப நாயை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், கடந்த 8 வருடம் 6 மாதங்கள் வரை சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வந்தனர். இந்த சீசர் மோப்ப நாய் 2016 ஆம் ஆண்டு வாங்கப்பட்டு ஒரு வருடங்கள் காசியாபாத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை நாய்கள் வளர்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் பயிற்சிகள் கொடுத்து வளர்க்கப்பட்டது.
இதையடுத்து சென்னைக்கு விமான நிலைய பாதுகாப்பு பணிக்கு சேர்க்கப்பட்ட இந்த சீசர் என்ற மோப்பநாய் விமான நிலையத்தில் துல்லியமாக மோப்ப சக்தியுடன் வெடிபொருட்களை கண்டுபிடிக்கக்கூடிய திறனுடன் பணியாற்றியது மேலும் பல அலுவலர்களிடம் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு கடந்த எட்டு வருடங்களாக பணிபுரிந்து வந்த சீசர் மோப்ப நாயின் வெற்றி பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் சென்னை பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் சீசர் மோப்ப நாய்க்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற மோப்ப நாய் சீசர்க்கு பதக்கம் மற்றும் மாலைகள் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மேலும் மோப்பநாய் சீசர்க்கு கேக் வெட்டி சிவப்பு கம்பளம் விரித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை வாகனத்தில் ஏற்றி வாகனத்தில் கயிறு கட்டி இழுத்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல் 8 ஆண்டுகள் பணியில் இருந்து ஓய்வு பெறும் சீசர் மோப்ப நாய்ய்க்கு பதிலாக யாழினி எனப்படும் மோப்பநாய் இன்று முதல் சென்னை விமான நிலையப் பணியில் சேர்க்கப்பட்டுள்ளது,இதையடுத்து யாழினி மோப்பநாய் அறிமுகப்படுத்தப்படும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
இந்த யாழினி மோப்பநாய் பிரிட்டிஷ் நாட்டு வகை சார்ந்த லாப்ரடோர் ரெட்ரீவர் நாய் ஆகும், ஒன்பது மாதம் வயதான யாழினி மோப்ப நாய்க்கு ராஞ்சியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியில் ஆறு மாத காலம் தீவிர பயிற்சி வழங்கப்பட்டது,
யாழினி மோப்பநாய் வெடி பொருட்கள் கண்டறிதல்,போதை பொருட்கள் கண்டறிதல்,தீவிர வாகன சோதனை, பயணிகளின் உடமைகள் சோதனை செய்வதற்கு தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த யாழினி மோப்பநாய் சுறுசுறுப்பாகவும்,அதிக திறன் உடையதாகவும், புத்திசாலித்தனமாகவும் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த யாழினி மோப்பநாய் சென்னை சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது நாளை முதல் அதன் பணியை அது தொடங்கும் என மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மறைத்து வைத்த வெடிபொருளை மோப்ப நாய் யாழினி கண்டுபிடித்து அசத்தியது,
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் மொத்தம் ஒன்பது மோப்ப நாய்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக், மத்திய தொழில் பாதுகாப்பு படை டி ஐ ஜி அருண் சிங் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு ஓய்வு பெறும் சீசர் மோப்பநயிக்கும் புதிதாக பணியில் சேரும் யாழினி மோப்ப நாய்க்கும் கேக் வெட்டி ஊட்டினர் என குறிப்பிடதக்கது.
Tags:
#சீசர் மோப்ப நாய்
# சென்னை விமான நிலையம்
#